கோவை மாநகரில் 139 ரவுடிகள் வெளியேற்றம்.போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் நடவடிக்கை

கோவை மே 8 கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் பொறுப்பேற்ற பின்னர் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதற்காக மாநகரத்தில் 24 மணி நேர ரோந்து பணி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாநகர பகுதியில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதில் குற்ற செயலில் ஈடுபட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு அதிகமாக மிரட்டல் விடுத்த 139 ரவுடிகள் கோவை மாநகர பகுதி விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது .தொடர்ந்து அந்த ரவுடிகள் உத்தரவை மீறி மாநகருக்குள் நுழைந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இது போன்ற நடவடிக்கை காரணமாக மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது. அத்துடன் பழைய குற்றவாளிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதுடன் ரோந்து பணியும் தீவிரமாக நடந்து வருவதால் மாநகரத்தில் குற்ற சம்பவங்கள் அதிகமாக குறைந்து உள்ளது .இது குறித்து போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் கூறியதாவது:- கோவை மாநகர பகுதியில் கடந்த 4 மாதத்தில் மட்டும் பொதுமக்களை மிரட்டுவது, சாட்சிகளை கலைப்பது உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 139 ரவுடிகள் மாநகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர் .இதன் காரணமாக குற்ற சம்பவங்கள் பெரிதும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 549 குற்ற சம்பவங்கள் நடந்திருந்தன. ஆனால் இந்த ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதத்தில் 293 குற்ற சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளது. கடந்த ஆண்டு விட 256 குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்த குற்ற சம்பவங்களை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் 24 மணி நேர ரோந்து பணி திட்டம். பொதுவாக போலீசார் ஒரு இடத்துக்கு வந்து சென்றாலே அங்கு குற்ற சம்பவங்கள் எதுவும் இருக்காது .எனவே இந்த திட்டம் குற்ற சம்பவங்களை கண்டிப்பாக குறைக்கும் .இதுவரை கடந்த 4 மாதங்களில் மட்டும் 84 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அது போன்று பொதுமக்களும் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், அலாரம் ஆகியவற்றை பொறுத்தினால் குற்றங்களை தடுக்க முடியும். அது போன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் கண்டிப்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்வது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.