18 பவுன் நகை திருட்டு.!!

கோவை சிங்காநல்லூர், அக்ரக ஹாரம் வீதியில் வசிப்பவர் சங்கர சுப்பிரமணியன் ( வயது 70) இவரது மனைவி கல்பனா ( வயது 68) ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சம்பவத்தன்று இவர்கள் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வீட்டுக்கு சலவை செய்யும் வேலை செய்து வந்த ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்த மகாகிருஷ்ணன் அவரது மனைவி ஜான்சி ஆகியோர் நகையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். துணியை சலவைக்கு போட்ட போது அதில் வீட்டு சாவி இருந்ததை வீட்டின் உரிமையாளர் சங்கர சுப்பிரமணியன் கவனிக்கவில்லை. அதனை சாதகமாக பயன்படுத்தி அந்த சாவி எடுத்துக் கொண்ட மகா கிருஷ்ணன், அவரது மனைவி ஜான்சி ஆகியோர் சந்தர்ப்பம் கிடைக்கும் போது சாவியை பயன்படுத்தி திருடி கொள்ளலாம் என்று எண்ணி இருந்தனர். அப்போதுதான் சங்கர சுப்பிரமணியன் மனைவியுடன் வெளியூர் சென்றதை அறிந்த மகா கிருஷ்ணன் -ஜான்சி தம்பதியினர் வீட்டை திறந்து பீரோவில் இருந்த மோதிரம் வளையல், செயின் மற்றும் வைர நகை என 18 பவுன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.