கோவையை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று கோவை ஆடீஸ் வீதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது வழக்கறிஞர் சாஜித் நிருபர்களிடம் கூறியதாவது
கோவையில் பிரபல தொழிலதிபர், அவரது மகன், மனைவி உட்பட 4 பேர் மீது பல்லடத்தை சேர்ந்த ஒருவர் ரூ. 120 கோடி மதிப்பிலான சொத்து பரிமாற்றம் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தார். விசாரணை குறைபாடு காரணமாக நீதிமன்றம் மூலம் குற்ற வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு 2023ம் ஆண்டு முதல் விசாரணை நடந்து வந்தது. இதற்கிடையே எதிர் தரப்பை சேர்ந்தவர் மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு அளித்து சட்டத்திற்கு புறம்பாக வழக்கு பதிவு செய்ய வைத்துள்ளார்.
சிலர் போலீஸ் உயர் அதிகாரி தங்களது உறவினர் என்று கூறி, எங்களது கட்சிக்காரர் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் மற்ற தரப்பினரிடம் பொய்யாக புகார் மனு பெற்று கந்துவட்டி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், ஆழியாரில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலைக்கு சென்னை தனியார் வங்கியில் வாங்கிய 10 கோடி ரூபாய் கடன் பிரச்னைக்கு கோவைக்கு சம்பந்தமில்லாத நிலையிலும், கோவை மாநகர போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில், மாநகர போலீஸ் உயர் அதிகாரியின் பெயரை பயன்படுத்தி இது போன்ற செயல்கள் நடைபெற்று வருகிறது.
தனியார் வங்கி பிரச்னைக்கு தாய் மற்றும் மகனை அதிகாலையில் கைது செய்து விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவர்களை மாநகர குற்ற பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 3.50 கோடி ரூபாய் செட்டில் செய்ய வேண்டும் என்று துன்புறுத்தி உள்ளனர். போலீஸ் உயர் அதிகாரி சில தொழில் அதிபர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு கோவையில் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கட்ட பஞ்சாயத்து செய்து வருவதால் இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.









