இந்தியாவில் பாம்புக்கடிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் பேர்பாதிக்கப்படுவதாகவும், அவர்களில் 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தரவுகள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் தான் பாம்புக்கடி அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் பாம்பு மீட்பாளர்கள் சிலரும் மரணமடைந்துள்ளனர்.கோவையில் கடந்த மார்ச் 19ம் தேதி பாம்பு மீட்பாளர் சந்தோஷ் பாம்பு பிடிக்கும்போது பாம்பு கடித்து உயிரிழந்தார். கடந்த ஆண்டில் முரளீதரன் என்ற பாம்பு மீட்பாளரும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல் என்ற பாம்பு மீட்பாளரும் கோவையில் பாம்பு கடித்து மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள 362 பாம்பு வகைகளில் தமிழ்நாட்டில் 134 வகையான பாம்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
இவற்றில் அதிக நஞ்சுள்ள பாம்புகள் 17, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாத நஞ்சுள்ள பாம்புகள் 11, ஆபத்தில்லாத அதே நேரத்தில் நஞ்சுள்ளவை 20, நஞ்சில்லாதவை 86 பாம்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வனத்துறையால் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ‘சர்ப்பா’ என்ற மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் கேரளாவில் பாம்புக்கடியால் உயிரிழப்போர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்திருப்பதாக கூறுகின்றனர்.
கேரளாவை பின்பற்றி ஒடிசா, கர்நாடகா மற்றும் தற்போது தமிழ்நாடும் செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. கடந்த ஜூலை 16ம் தேதி உலக பாம்புகள் தினத்தன்று ‘நாகம்’ செயலியின் பீட்டா பதிப்பை தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ அறிமுகப்படுத்தி வைத்ததுடன், முதற்கட்டமாக பாம்பு மீட்பாளர்களுக்கான பயிற்சியையும் துவக்கி வைத்தார். ஆனால் ‘நாகம்’ செயலி குறித்து போதுமான விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை.
தீயணைப்பு துறையினரையோ, பாம்பு பிடி வீரரையோ தான் மக்கள் அழைத்து பாம்பை மீட்க முயற்சி செய்கின்றனர். சில சமயங்களில் மக்கள் பயத்தால் பாம்பை அடித்துக்கொன்று விடுகின்றனர். இதில் விஷம் இல்லாத பாம்புகளும் அதிகளவில் கொல்லப்படுவதாக தெரியவருகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், மக்கள் பாம்பை கொல்லதான் நினைக்கின்றனர். தற்போது நகரத்தின் மைய பகுதிகளிலும், வீடுகளிலும் சர்வசாதாரணமாக பாம்பு உலாவுகிறது.
கோவை மாவட்ட தீயணைப்பு துறைக்கு பாம்பு பிடிக்க 500க்கும் மேற்பட்ட அழைப்புகளும், பாம்பு பிடி வீரர்களுக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகளும் நடப்பாண்டில் வந்துள்ளன.
இது குறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:
உணவை தேடி பாம்புகள் இடப்பெயர்ச்சி ஆகிறது. இதனால், வீடுகளை சுற்றியும் சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. எலி பொந்து தென்பட்டால் அதை அடைத்து விட வேண்டும். பாம்பு உலா வருவது தெரியவந்தால் வீட்டை சுற்றி பிளீச்சிங் பவுடரை போட்டு வைத்தால் பாம்பு வருவதை தவிர்க முடியும்.
வீடுகளிலோ, வீட்டிற்கு வெளியையோ பாம்பை பார்த்தால், அதன் மீது உள்ள பார்வையை மாற்றக்கூடாது. பார்வை தப்பினால் பாம்பு எங்கு சென்றது? என்பதை கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படும். நாம் நடக்கும் அதிர்வை உணர்ந்தும் பாம்பு எங்காவது சென்று பதுங்கிவிடும். எனவே பாம்பின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டே தீயணைப்பு துறைக்கோ, அனுபவம் உள்ள பாம்பு பிடி வீரர்களுக்கோ அழைக்க வேண்டும்.
இவ்வாறு நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 8 மாதத்தில் தீயணைப்பு துறைக்கு மட்டும் 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. அதன்படி தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு 29 அழைப்புகளும், வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு 50 அழைப்புகளும், கணபதி 29, பீளமேடு 25, சூலூர் 23, அன்னூர் 25, மேட்டுப்பாளையம் 63, பெரியநாயக்கன்பாளையம் 54, கோவைப்புதூர் 32, தொண்டாமுத்தூர் 21, கிணத்துக்கடவு 21, பொள்ளச்சி 35, வால்பாறை 11 என 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளது. இந்த அழைப்புகளில் சில பாம்புகள் தப்பி விடும். அதேபோல மற்ற பாம்புகளை அடித்து கொல்வதைப்போல நாக பாம்பை மக்கள் அடித்து கொல்வது இல்லை. அதனை தெய்வ நம்பிக்கையாக நினைக்கின்றனர்.இவ்வாறு தீயணைப்பு துறையினர் கூறினர்.
பாம்பு மீட்பாளரும், பயிற்சியாளருமான சாந்தகுமார் கூறியதாவது:
இனப்பெருக்கம், வாழ்விடம் சுருக்கம் போன்ற காரணங்களால் பாம்புகள் நகரத்தில் அதிகளவில் தென்படுகிறது. பாம்பின் உணவாக தவளை , சிறிய பறவைகள், பறவைகளின் முட்டை போன்றவை இருந்து வந்தது. ஆனால் அவை பாம்புகளுக்கு அதிகளவில் கிடைப்பது இல்லை. தற்போது எலி பிரதான உணவாக மாறிவிட்டது. எலிகள் நகரங்களில் அதிகளவில் இருப்பதால் அதனை தேடி பாம்புகள் இடம்பெயர்ந்து நகரத்திற்குள் வந்து விடுகிறது. இதனால் பாம்புகள் அதிகளில் கொல்லப்படுகிறது. விஷம் உள்ள பாம்பு எது, விஷம் இல்லாத பாம்பு எது என தெரியாமல் அச்சம் அடைந்து மக்கள் கொன்றுவிடுகின்றனர். சிலரின் விழிப்புணர்வால் பாம்புகள் பிழைத்து விடுகிறது. எனக்கு மட்டும் மாத்தில் 20 முதல் 25 அழைப்புகள் பாம்பை மீட்க அழைப்புகள் வருகிறது. நடப்பாண்டில் 300 பாம்புகளை மீட்டு வன பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.







