4மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 5,600 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

கோவை .ஜூலை 2 கோவை, திருப்பூர், நீலகிரி. ஈரோடு மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தலில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கோவை கோர்ட்டின் குடோன்களில் வைக்கப்பட்டு இருந்தது. போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டப்படி போதை பொருள் கடத்தல் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை அழிக்க ஐகோர்ட் நீதிபதிகள் கார்த்திகேயன், சதீஷ்குமார் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி கோவை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி விவேகானந்தன் உத்தரவின் பேரில் போதை பொருட்களை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ( என் .ஐ பி )காவல்துறையினர் கைப்பற்றிய போதைப் பொருள்களில் 2,340 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. மற்றும் வழக்கில் கடத்தலுக்கு பயன்படுத்திய 8 இருசக்கர வாகனங்கள் , 7 நான்கு சக்கர வாகனங்கள் போதை அழித்தல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்ட உள்ளூர் போலீசார் பறிமுதல் செய்த 3,250 கிலோ கஞ்சாவும் அளிக்கப்பட்டது. மொத்தம் 5,600 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டதாக நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.