சேலம் கோட்ட பிரிவில் பணிபுரிந்து வரும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில்கள், ரயில் நிலையங்களில் ஏற்படும் குற்றசம்பங்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பிற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதேபோல ரயிலில் கடத்தி வரப்பட்ட குழந்தைகள், பெற்றோரிடம் கோபித்து கொண்டு ரயிலில் வந்த குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 2024ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை நடந்த பல குற்றச்சம்பவங்களுக்கு தீர்வு கண்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது:
ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கடந்த 2024ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் ரயில்வே போலீசாருடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் இருந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் விளைவாக, இந்திய ரயில்வே முழுவதும் செயல்பட்டு வந்த பல மாநிலங்களுக்கு இடையேயான குற்றக் குழுக்களின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.
2024ம் ஆண்டு ஜூன் மாதத்தில், சங்ககிரி–ஈரோடு பகுதியிலுள்ள 4 ரயில் கொள்ளை வழக்குகள் வெற்றிகரமாக விசாரிக்கப்பட்டு, அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்ட அனைத்து சொத்துகளும் மீட்கப்பட்டன. அதேபோல திருப்பூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து ரூ.11.16 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் மற்றும் ரூ.10.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் துரிதமான விசாரணை மேற்கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மகாராஷ்டிரா வரை சென்று, சோலாப்பூரை மையமாக இயங்கிய 7 பேர் கும்பலை ஒரு வாரத்திற்குள் கைது செய்தனர்.
2025ம் ஆண்டில், சேலம் சந்திப்பில் செல்போன் திருட்டுகள் அதிகரித்து வந்தது. இதனை கண்டு பிடிக்க உடலில் அணியும் கேமராக்கள் மற்றும் நவீன டிஜிட்டல் பொரென்சிக் முறைகள் பயன்படுத்தப்பட்டன. சிசிடிவி கேமரா காட்சிகள், யுபிஐ பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் அழைப்பு விவரப் பதிவுகள் (சிடிஆர்) ஆகியவற்றின் ஆய்வின் மூலம், சந்தேக நபர்கள் காட்பாடி வரை பின்தொடரப்பட்டனர். அப்போது ஜார்க்கண்ட் மாநிலம் நோனிய கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 60 செல்பேசிகள் மீட்கப்பட்டது. மேலும், 200க்கும் மேற்பட்ட பொருட்களை பிற மாநிலங்களுக்கு கடத்தியதாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.
இதனுடன், ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகங்களில் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. போதைப் பொருள் தடுப்பு மற்றும் பிற சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, 2024ம் ஆண்டில் ரூ.4.88 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 22 பேர் கைது செய்யப்பட்டனர். 2025ம் ஆண்டில், ரூ.5.84 கோடி போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 65 பேர் கைது செய்யப்பட்டனர். இது கடந்த 2024ம் ஆண்டை விட அதிகம். இந்த போதை பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதேபோல சட்ட ஒழுங்கு மட்டுமின்றி, சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மனிதநேயப் பொறுப்புகளிலும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அதன்படி ரயில்கள் மற்றும் ரயில்வே வளாகங்களில் ஆதரவின்றி தவித்த குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில் 355 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பெற்றோரிடம் கோபித்து வந்த 490 குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சேலம் கோட்டத்தின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. குற்றச் செயல்கள் நிகழ அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் சிசிடிவி நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளுக்கான சிறந்த கோட்ட விருதை சென்னை கோட்டத்துடன் இணைந்து பகிரப்பட்டது. 2024ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் 6 கோட்டங்களில் பயணிகள் பாதுகாப்புக்கான சிறந்த கோட்ட விருதையும் சேலம் கோட்டம் பெற்றுள்ளது.
மேலும், சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனராக பணிபுரிந்து வந்த சவுரவ் குமார் புகார்களை உடனுக்குடன் பரிசீலித்து தீவிர நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். அவரது தலைமையில் கடந்த 3 ஆண்டுகள் ரயில்வே பாதுகாப்பு படை சிறப்பாக செயல்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.








