பாகிஸ்தான் மீது தாக்குதல். கோவையில் போலீசார் தீவிர சோதனை.

கோவை மே 8 காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பணிகள் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 70 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி கோவை விமான நிலையம், ரெயில் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ளே செல்லும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டன. இது தவிர கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அத்துடன் தீவிர வாகன சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.