கும்பாபிஷேகம்:கோவை -திருச்செந்தூர் சிறப்பு ரயில்..பக்தர்கள் கோரிக்கை

கோவை ஜூலை 2 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம்படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி நடக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக நடைபெறுவதால் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கோவையிலிருந்து பக்தர்கள் கும்பாபிஷேக விழாவுக்கு செல்லும் வகையில் திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்: -இதுகுறித்து கோவை சேர்ந்த முருக பக்தர்கள் மற்றும் ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் ஆர். சண்முகம் ஆகியோர் கூறியதாவது:- திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா வருகிற 7-ம் தேதி நடக்கிறது. இதில் முதியவர்கள் பெண்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்ள திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல விரும்புவார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக கும்பாபிஷேக விழாவுக்கு 2 நாட்களுக்கு முன்பும் கும்பாபிஷேகம் முடிந்து 2 நாட்களுக்குப் பிறகும் கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். இதன் மூலம் பக்தர்கள் பயன்படுவார்கள். மேலும் ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.