டி.எஸ்.பி குற்றச்சாட்டு மயிலாடுதுறை ஜூலை 18
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், உயர் அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டை டிஎஸ்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் தற்போது அமலாக்கப்பிரிவில் மதுவிலக்கு துணைக்காவல் கண்காணிப்பாளராக திரு. சுந்தரேசன் அவர்கள் பணியாற்றி வருகிறார். கடந்த 07.04.2025 முதல் டிஎன் 51ஜி 0817 பதிவு எண் கொண்ட பொலீரோ வாகனம் அலுவலக பணிகளை மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் முக்கிய அலுவலுக்காக கடந்த 11.07.2025-ந் தேதி அவர் பயன்படுத்தி வந்த டிஎன் 51ஜி 0817 பதிவெண் கொண்ட பொலீரோ வாகனம் எடுக்கப்பட்டு, மாற்று வாகனமாக டிஎன் 51 G 0616 பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வழங்கப்பட்டது.
பின்னர் நேற்று 17.07.2025-ந் தேதி மீண்டும் ஏற்கனவே பயன்படுத்தி வந்த டிஎன் 51ஜி 0817 பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைக்காவல் கண்காணிப்பாளர் ந.சுந்தரேசன் என்பவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், மேற்கண்ட வருவது துணைக்காவல் கண்காணிப்பாளருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும், உண்மைக்கு புறம்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும், செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் யிலாடுதுறை மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கடந்த 5-ம் தேதி அமைச்சர் மெய்யநாதனின் பாதுகாப்பு பணிக்காக தன்னுடைய வாகனத்தை மாவட்ட காவல்துறை கேட்டனர். அது “புரோட்டா “காலில் கிடையாது என்பதால் என்னுடைய வாகனத்தை தர மறுத்து விட்டேன். அது சம்பந்தமாக தனிபிரிவு.இன்ஸ்பெக்டர் தன்னிடம் பேசினார். அப்போது எந்த ஒரு ஆர்டரும் இன்றி, என்னால் வாகனத்தை தர முடியாது. வாகனம் வேண்டுமென்றால் முறையான உத்தரவு போட வேண்டும். ஆனால் வாகனத்தை கொடுக்கவில்லை என்பதற்காக, உடனடியாக என்னை மைக்கில் கூப்பிட்டு திருச்செந்தூருக்கு வேறு ஒரு டிஎஸ்பி பாதுகாப்பு பணிக்கு செல்ல இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு என்னை பாதுகாப்பு பணிக்காக செல்ல உத்தரவு விட்டனர்.
7-ம் தேதி அங்கு பாதுகாப்பு பணி முடித்த நிலையில், மீண்டும் என்னை எஸ்பி அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு திருவாரூருக்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல அறிவுறுத்தினர். அங்கும் சென்று பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு 3 தினங்களுக்கு பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு திரும்பி விட்டேன். மீண்டும் அமைச்சர் மெய்யநாதனுக்கு வாகனம் வேண்டும் என எனது வாகனத்தை கேட்டனர். அப்போது எனது வாகனம் ஏற்கனவே இருமுறை கான்வாயில் பழுதாகியுள்ளது. இருந்தபோதிலும் நீங்கள் கேட்பதால் எனது வாகனத்தை தருகிறேன். ஆனால், இந்த வண்டி பிரச்சினைக்குரிய வண்டி எனக் கூறி வாகனத்தை தந்தேன்.
10-ம் தேதி வாகனத்தை கொடுத்த நிலையில் இன்று வரை மீண்டும் தனக்கு வாகனத்தை திருப்பி அளிக்கவில்லை. நான் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வந்தேன். என்னிடம் சொந்த இருசக்கர வாகனம் கூட இல்லாததால் சக காவலர்கள் வாகனத்தை தான் பயன்படுத்தினேன். தொடர்ந்து இரவல் வாகனத்தை பயன்படுத்த முடியாது என்பதால், கடந்த இரண்டு நாட்களாக எனது அலுவலகத்திற்கு நடந்து வந்தேன். அதனை ஊடகங்களில் படம் பிடித்து போட்டுள்ளனர். நான் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 1200 வழக்குகள் பதிவு செய்து 700 பேர்களை சிறையில் அடைத்துள்ளேன், 5 பேரை குண்டாஸில் அடைத்துள்ளேன்.
இது காரைக்கால் பார்டர் என்பதால் அங்கிருந்து வெளி மாநில மது பானங்கள் கடத்தப்படுவதை முழுவதுமாக கண்ட்ரோல் செய்துள்ளேன். இதனால் அதிகாரிகளுக்கு வரும் சாரய மாமுல் நின்று போனது. என்னை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூப்பிட்டு விரலை நீட்டி அதனை வளைத்துக் காட்டி இதுபோல் சற்று வளைந்து போங்க, இல்லையென்றால் விரலை உடைத்து விடுவார்கள் என எஸ்பி மிரட்டுகிறார். இது ஒரு அதிகாரி பேசும் பேச்சா? இது போன்ற அதிகாரியிடம் எவ்வாறு வேலை பார்ப்பது? நான் நேர்மையா இருந்த ஒரே காரணத்திற்காக இவ்வளவு சிக்கல்களை சந்தித்து வருகிறேன். நான் எனது அறைக்கு ஏசியை லஞ்சமாக பெற்றதாக பேசப்படுகிறது.
பாத்ரூம் கூட இல்லாத எனது அறையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தான் கஷ்டப்படுவதை அறிந்து, எஸ்.ஐ ஒருவர் அவர் வீட்டில் இருந்த பழைய ஏசியினை இங்கு அமைத்துக் கொடுத்தார். என்னை எப்படி எல்லாம் கார்ணர் செய்ய வேண்டுமோ அவ்வாறு செய்கின்றனர். நான் யாரிடமும் பணம் வாங்காமல் நேர்மையாக பணி செய்து வருகிறேன். நேற்று எஸ்.பி. என்னை கூப்பிட்டு எனக்கும் உங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது, ஐஜி இன்டெலிஜென்ட் செந்தில்குமார் மற்றும் ஏடிஜி லாண்டாடர் இவரும் தான் உங்களை டார்ச்சர் செய்ய சொல்கிறார்கள்.
இது எவ்விதத்தில் நியாயம்? மனித உரிமை ஆணையத்தில் பணிபுரிந்தபோது அவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மீது புகார் அளித்தற்காக தன்னை இவ்வளவு டார்ச்சர் செய்து வருகின்றனர். சத்தியமாக நான் நேர்மையான அதிகாரி. நவம்பர் மாதம் 2024-ஆண்டு மயிலாடுதுறைக்கு பணிக்கு வந்தேன். கடந்த 4 மாதங்களாக எனக்கு சம்பளம் போடவில்லை என தனது தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.