ஆடி மாத கிருத்திகை :மருதமலைசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

கோவை ஜூலை 20 மாதந்தோறும் வரும் கிருத்திகை நாட்களில் முருகப்பெருமானை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் ஆடி மாதம் வரும் கிருத்திகையில் முருகனை வழிபட்டால் அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த நிலையில்நேற்று ஆடி மாத முதல் கிருத்திகையை யொட்டி காலை 6 மணிக்கு மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்பட 16 வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது .காலை 12 மணி அளவில் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார் .இதை தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்குசாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுப்ரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் கோவிலை சுற்றி உலா வந்தார். ஆடி கிருத்திகை என்பதால் காலை 6 மணி முதல் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மருதமலை அடிவாரம், மலைப்பகுதி, பஸ் ஏறுமிடம், மலைப்பாதை படிக்கட்டுகள், கோயில் வளாகம் என பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது . எனவே மலை மீது செல்ல இரு சக்கரம் ,நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் கோவில் பஸ்களில் ஏறி மலைக் கோயிலுக்கு சென்றனர். ஆடி கிருத்திகையையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.