பொள்ளாச்சியில் 4 தலைவர்களின் சிலை.முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்

கோவை ஆகஸ்ட் 11 முதலமைச்சர் மு .க . ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு மேற்கொள்வதுடன் முடிவற்ற திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த 22, 23 -ஆம் தேதி கோவை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள இருந்தார் ஆனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்த நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்திவைக்கப்பட்டது. ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நரசிங்கபுரத்துக்கு புறப்பட்டு சென்றார்.வழிநெடுகிலும் மக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இரவில் அங்கு தங்கிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) காலையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கினார். பின்னர் உடுமலையில் இருந்து காரில்புறப்பட்டு பகல் 12 மணிக்கு பொள்ளாச்சி வந்தார். அங்கு பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் பி.ஏ.பி. திட்டம் உருவாக காரணமான முன்னாள் முதலமைச்சர் காமராஜர், சி சுப்பிரமணியம்,வி.கே. பழனிச்சாமி, கவுண்டர், பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோரது திருவுருவச் சிலைகளை திறந்து வைத்தார். பரம்பிக்குளம் ஆழியார் அணை கட்டுமான பணியின் போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவரங்கத்தையும் திறந்து வைத்தார். பின்னர் வி. கே . பழனிச்சாமி கவுண்டர் அரங்கத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பரம்பிக்குளம் அடையாறு பாசன திட்ட பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தை பார்வையிட்டார்..நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பொள்ளாச்சியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார் .திறப்பு விழாவை யொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதலமைச்சர் வருகையை யொட்டி கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் தலைமையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. செந்தில்குமார், கோவை சரக டி .ஐ.ஜி சசிமோகன் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் மற்றும் உதவி சூப்பிரண்டு சிருஷ்டி சிங், துணை சூப்பிரண்டுகள்
இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் மேற்பார்வையில்விமான நிலையத்திலும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.