தொண்டாமுத்தூர் அருகே விளைநிலங்களில் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்

கோவை செப்டம்பர் 8 கோவை கோட்டத்துக்கு உட்பட்ட மதுக்கரை, போளுவாம்பட்டி, வனச்சரக பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவை அடிக்கடி மலையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக மதுக்கரை வனச்சரகம், தொண்டாமுத்தூர் அருகே குப்பே பாளையம், கரடி மடை மற்றும் போளுவாம்பட்டி,தேவராயம்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ளவிளைநிலங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நரசிபுரம் அருகே வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் வெளியே வந்தன .அவைகள் அங்குள்ள கோசாலைக்குச் செல்லும் வழியில் விளைநிலங்களில் புகுந்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து வாழை, தென்னை மரங்களை தின்றும் சாய்த்தும் சேதப்படுத்தியது. அதோடு விளை நிலங்களை சுற்றி போட்டு இருந்த கம்பிவேலிகளையும் யானைகள் சாய்த்து சேதப்படுத்தி சென்று விட்டது.இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் பீதியில் உள்ளனர். காட்டு யானைகளை பிடிக்க தாழியூர் பகுதியில் கும்கி யானைகளை நிறுத்த வேண்டும். அப்போதுதான் காட்டு யானைகள் வராது. அதை செய்ய வனத்துறை முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குஉரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்று விவசாயிகள் கூறினார்கள்.