விஷம் குடித்து உயிருக்கு போராடிய அண்ணனை காப்பாற்ற முயன்ற தம்பி வெட்டி படுகொலை

கோவை செப்டம்பர் 9 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை காளியபுரம் பகுதியில் உள்ள சோமநாத புரத்தைச் சேர்ந்தவர் செந்தில் என்ற திருமூர்த்தி (வயது 45) இவரது அண்ணன் ரகுபதி ராம் (வயது 52) இவர்கள் 2 பேரும் தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள் . ரகுபதி ராமின் மனைவி வெண்ணிலா (வயது 48) இவர் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். ஆனால் வெண்ணிலா வேலைக்கு செல்வதுகணவர் ரகுபதி ராமுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் வெண்ணிலாவை வேலைக்கு செல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன் – மனைவிக்குஇடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து வேலைக்கு சென்றதால் விஷம் குடித்து இறந்து விடுவதாக கணவர் ரகுபதி ராம் வெண்ணிலாவிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை வெண்ணிலா சமையல் வேலைக்கு சென்று விட்டார் .இதை அறிந்த ரகுபதி ராம் வெண்ணிலா விடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தார் .இதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த வெண்ணிலா உடனே செல்போனில் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உறவினர்கள் மற்றும் ரகுபதி ராமின் தம்பி செந்தில் ஆகியோர் ரகுபதி ராம் வீட்டுக்குச் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர் ஆனால் ரகுபதி ராம் மருத்துவமனைக்கு வர மறுத்து அடம்பிடித்தார் இது தொடர்பாக ரகுபதி ராமுக்கும், செந்திலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ரகுபதி ராம் தம்பி என்று கூட பார்க்காமல் தேங்காய் வெட்டும் அரிவாளால் செந்திலை கழுத்தில் வெட்டினார் .இதில் செந்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை சற்று எதிர்பாராத உறவினர்கள் உடனே செந்திலை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இதே நேரத்தில் விஷம் குடித்த ரகுபதி ராமும் பொள்ளாச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணைநடத்தினர். போலீஸ் பாதுகாப்புடன் அண்ணன் ரகுபதி ராமுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்ததும் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.