பல கோடி ரூபாய் வங்கி கடனை ஒரே நேரத்தில் செலுத்திய தி.மு.க. பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

கோவை செப்டம்பர் 10 கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள செலக் கரிச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். அதே பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக நூற்பு மில் நடத்தி வருகிறார். ராமச்சந்திரன் மனைவி கோமதி மற்றும் மகள் சவுமியா மகன் வெங்கடேசன். இதில் ராமச்சந்திரன் தி.மு.க.வில் உறுப்பினராகவும் அவரது மகன் வெங்கடேசன் சுல்தான் பேட்டை ஒன்றிய மேற்கு திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளனர். மகள் சவுமியா நூற்பு மில்லில் பங்குதாரராக உள்ளார். இதற்கிடையே நூற்பாலை தொடங்க ராமச்சந்திரன் மற்றும் சவுமியா ஆகியோர் சில வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து வங்கிகளில் வாங்கிய கடனுக்காக தவணைத் தொகையாக கடந்த பல மாதங்களாக கட்ட முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் வங்கி அதிகாரிகள் கொடுத்த கடனுக்காக நூற்பு மில்லை ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.. இதையடுத்து திடீரென ஒரே நேரத்தில் பல கோடி ரூபாய் வங்கி கடனை செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குசந்தேகம் ஏற்பட்டது . இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் 3கார்களில் 10 பேர் கொண்ட அமலாக்க துறை அதிகாரிகள் செலக் கரிச்சலில் உள்ள ராமச்சந்திரன் வீட்டு முன் வந்து இறங்கினர். அவர்களுடன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசாரும் வந்திருந்தனர் . அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து ராமச்சந்திரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நூற்பு மில்லில் சோதனை தொடங்கினர். இந்த சமயத்தில் வீட்டில் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இல்லை. அவர் தாயார் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இது பற்றி அதிகாரிகள் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். முன்னதாக சோதனையையொட்டி ராமச்சந்திரன் வீடு மற்றும் மில்லுக்குள் யாரும் நுழையாதபடி வாசல் கதவை அடைத்தனர் .திமுக பிரமுகர் வீடு மற்றும் நூற்பு மில்லில்அமலாக்கத் துறையினர் நடத்தியதிடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.