கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ச் வரை, 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 1791 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட மேம்பாலத்தை, முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் மிக நீளமான இந்த பாலத்தில் பயணம் செய்ய, பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வாகனத்தில் சென்று வந்தனர். பாலத்தை திறந்த மூன்று நாட்கள் ஆன நிலையில், 13 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில், நடந்த கோர சாலை விபத்தில், மூன்று பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. புதிய மேம்பாலத்தில் சொகுசு காரில் பயணித்த ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நபர்கள், அதிவேகமாக காரை இயக்கியதாக கூறப்படுகிறது. பாலம் இறங்கக்கூடிய கோல்டுவின்ஸ் பகுதியில் நிலை தடுமாறிய கார், சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரிக்குள் புகுந்தது அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்த மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.அங்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரம் போராடி, லாரிக்கு அடியில் சிக்கிய, நொறுங்கிய காரில் இருந்த மூன்று நபர்களையும் சடலமாக வெளியே எடுத்தனர். திறக்கப்பட்ட மூன்று நாளில், ஜிடி நாயுடு பாலத்தில் மூன்று பேர் விபத்தில் பலியானது, கோவை நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உக்கடம் மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. அதிலும் சாலை விபத்து ஏற்பட்டு ஒருவர் பலியானார். இதற்கு சில மாதங்களுக்கு முன்பு திருச்சி சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதிலும் தொடர்ச்சியாக மூன்று விபத்துக்கள் நிகழ்ந்தன. இதிலும் உயிர் பலிகள் ஏற்பட்டதை ,தொடர்ந்து மேம்பாலத்தில் ஆங்காங்கே ஸ்பீடு பிரேக்கர்கள் அமைக்கப்பட்டு, வாகனங்களின் வேகம் கட்டுப்படுதப்பட்டது. இதனால் பெரிய அளவில் விபத்துகள் குறைக்கப்பட்டதாக போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது. பாலத்தில் அதிவேகமாக பயணிப்பது, விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே வாகனங்களில் செல்பவர்கள், கவனமாக,மிதவேகத்தில் சென்று வந்தால், இது போன்ற விபத்துகளை தவிர்க்க முடியும்.

What’s your reaction?
Love1
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0





