தங்கம் விலை எப்படி,எதனால் உயர்கிறது.இதனை நிர்ணயிக்கும் காரணிகள் எவை என்பதை விவரிக்கும் சிறப்பு செய்தி தொகுப்பு.
அரசர்கள் காலம் முதலே,ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தங்கம் பெரும் பங்கு வகித்து வருகிறது. உலக தங்க கவுன்சில் புள்ளிவிவரங்கள் படி, டிசம்பர் 2024 ஆண்டு இறுதியில் ,அமெரிக்கா 8133 டன் தங்க இருப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது, ஜெர்மனி 3,351 டன்களுடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலி மூன்றாவது இடத்திலும், பிரான்ஸ் நான்காவது இடத்திலும், சீனா 2280 டன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.இந்தப் பட்டியலில் இந்தியா 876 டன் தங்க இருப்புடன் ஏழாவது இடத்தில் உள்ளது.உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குகின்றன.சர்வதேச அளவில் பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, சிறிய முதலீட்டாளர்களும் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர்.இதற்கு காரணம்,பல்வேறு நாடுகள் மீது டிரம்ப் வரி விதித்தது , எச்1பி விசா கட்டணம் உயர்வு,உலக அளவில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகிறது. இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது.அதேபோல் இந்தியா,சீனா,ரஷ்யா,சவுத் ஆப்பிரிக்கா,அரபு நாடுகள் உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளும், டாலருக்கு மாற்றான சக்தி வாய்ந்த கரன்சியை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டு உள்ளதும், மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
உலகில் ஒரு வித பொருளாதார நிலையற்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஒரு தயக்கம் இருக்கிறது. ஏனெனில், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அடுத்தடுத்த நாட்களில் அதன் போக்கு எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக,பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுவதால், விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
உலக தங்க கவுன்சிலின் புள்ளி விபரங்களின் படி, உலகெங்கிலும் உள்ள மக்கள், தங்க ஈடிஎஃப் எனப்படும்,பரிவர்த்தனை வர்த்தக நிதியில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் 16 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர், ஐரோப்பியர்கள் சுமார் 8 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளனர்.இந்தியாவில் மட்டும், 902 மில்லியன் டாலர் அதாவது ரூ.8,000 கோடி மதிப்புள்ள ஈடிஎஃப்-கள் வாங்கப்பட்டன.சீனா 602 மில்லியன் டாலர், ஜப்பான் 415 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஈடிஎஃப் தங்க முதலீடு செய்து உள்ளன.ஒட்டுமொத்தமாக, உலகளவில் தங்க ஈடிஎஃப்-களின் மொத்த அளவு 472 பில்லியன் டாலரை எட்டியுள்ளது, இது முந்தைய காலாண்டை விட 23 சதவீதம் அதிகமாகும்.மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்யும் ஆர்வத்தை பார்க்கும்போது, “தங்கம் பிரகாசித்துக் கொண்டே இருக்கும், அது தங்களைக் கைவிடாது” என நம்புகிறார்கள் என்பது தெளிவாகிறது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








