கோவை:தொழில்நுட்பம் நிறைந்த இந்த நவீன காலத்தில் மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடி கும்பல் டிஜிட்டல் கைது, போதை பொருட்கள் கடத்தலில் தொடர்பு என பல்வேறு வழிகளில் அச்சுறுத்தி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்த நிலையில் பயங்கரவாதத்தில் ஈடுபடும் தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பியதற்காக டிஜிட்டல் கைது செய்ததாக கூறி கோவையில் தம்பதியை மிரட்டி வீட்டுக்குள்ளேயே சிறை வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் 65 வயது முதியவர். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று முதியவர் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசி நபர் தான் மும்பையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். தொடர்ந்து அந்த நபர் உங்கள் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கில் சோதனை செய்ததில் பயங்கரவாதிகளுக்கு பலமுறை பணம் அனுப்புவது தெரிய வந்துள்ளது. இதனால் உங்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் உங்கள் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர் .சிறிது நேரத்தில் போலீஸ் அதிகாரி போன்று சீருடை அணிந்து வீடியோ காலில் பேசிய நபர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதால் உங்களையும் உங்கள் மனைவியையும் டிஜிட்டல் கைது செய்துள்ளோம். வீட்டை விட்டு நீங்கள் வெளியே செல்லக்கூடாது .உங்களை “ஹவுஸ் அரஸ்ட்” செய்துள்ளோம்.என்று கூறினர் மேலும் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் போலீசார் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் சுட்டு விடுவார்கள். உங்கள் வங்கி கணக்கில் உள்ள ரூ.18 லட்சத்தை நாங்கள் சொல்லும் வங்கி கணக்கிற்க்கு அனுப்ப வேண்டும். உங்கள் வங்கி கணக்கு முழுமையாக சோதனை செய்த பின்னர் அந்த பணத்தை மீண்டும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு நாங்கள் திருப்பி அனுப்பி விடுவோம் என்று கூறினர் .மேலும் பணத்தை அனுப்பும் வரை வீடியோ கால் இணைப்பை துண்டிக்க கூடாது என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் பயந்து போன முதியவர் தனது மனைவியுடன் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளார்.இதற்கிடையில் வீடியோ காலில் போலீஸ் அதிகாரி என்று கூறி அவ்வப்போது சிலர் பேசினார்.அவர்கள் உடனடியாக நாங்கள் கூறிய வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்புமாறு மிரட்டிக்கொண்டே இருந்தனர். குறிப்பாக வீட்டுக்குள் உள்ள கழிவறைக்கு கூட போக விடவில்லை என்று கூறப்படுகிறது. மிகுந்த பயத்தில் இருந்து தம்பதி இரவு முழுவதும் தூங்காமலும், வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே தவித்தனர். ஆனால் அவர்கள் மோசடி ஆசாமிகள் கூறிய வங்கி கணக்குக்கு பணத்தை அனுப்பவில்லை .இந்த நிலை 2 நாட்கள் வயதான தம்பதிகள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் முதியவர் வீட்டின் கதவைத் தட்டினார்கள். அப்போது கதவை திறந்த முதியவர் தங்களை மும்பை போலீசார் டிஜிட்டல் கைது செய்திருப்பதையும், வெளியே வந்தால் சுட்டுத் தள்ளி விடுவதாகவும் மிரட்டினார்கள் என்று தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அப்படி யாரும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது. வெளியே துப்பாக்கியுடன் போலீசார் யாருமில்லை என்று கூறி அவர்களுக்கு தைரியமூட்டி, சமாதானப்படுத்தி மீட்டு வெளியே அழைத்து வந்தனர். அதன் பின்னர் முதியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் .
இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- டிஜிட்டல் கைது என்று எதுவுமே கிடையாது. யாரும் போலீஸ் போன்று செல்போனில் பேசி டிஜிட்டல் கைது செய்துள்ளோம் என்று கூறினால் நம்ப வேண்டாம். யாரையும் டிஜிட்டல் கைது செய்ய முடியாது வீடியோ காலில் வரும் மோசடி கும்பல் நம்ப வைப்பதற்கு பல யுக்திகளை கையாளுவார்கள் . இந்த விஷயத்தில் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.









