காலில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டியானையை, தாய் யானை சாலையை கடக்க பாதுகாப்பாக உடன் செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை கலங்கச் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, தமிழக எல்லைப் பகுதியான பட்டவயல் என்ற பகுதியில், யானைகள் நடமாட்டம் எப்பொழுதும் இருக்கும். வனப்பகுதி வழியாக தமிழகத்திலிருந்து கேரளா செல்லக்கூடிய இந்த சாலையில், வாகன போக்குவரத்து அதிகம். இரவு நேரத்தில் யானை கூட்டம் ஒன்று, இந்த சாலையை கடந்து சென்றது. அப்போது குட்டி யானை ஒன்று நடப்பதற்கு சிரமத்துடன் சாலையில் நடந்து சென்ற காட்சிகள் தான் இது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினார்கள்.
தாய் யானை மிகவும் பாதுகாப்பாக குட்டி யானை சாலையைக் கடக்க உடன் நின்றது, பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த காட்சிகளை வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். காலில் காயம் பட்ட குட்டி யானை நடமாட்டத்தை, தமிழக கேரள வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதற்கு சிகிச்சை கொடுக்கப்படுமா என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






