5வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்.!!

மிழகத்தில் பணி நிரந்தரம் செய்யக் கோரி எம்.ஆர்.பி (MRP) செவிலியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 5-வது நாளை எட்டியுள்ளது.

சென்னை நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திரண்டுள்ள நூற்றுக்கணக்கான செவிலியர்கள், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளனர். இந்தப் போராட்டத்தினால் அரசு மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கவும், செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணவும் தமிழக அரசு இன்று ஒரு முக்கியப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

கடந்த வாரம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 700-க்கும் மேற்பட்ட செவிலியர்களைப் போலீசார் கைது செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். ஆனால், செவிலியர்கள் அங்கேயே தங்களது போராட்டத்தைத் தொடர்ந்ததால், மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்தும் வெளியேறிய செவிலியர்கள், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அங்கேயே அமர்ந்து இரவு பகலாகப் போராடி வருகின்றனர். ஏற்கனவே அமைச்சருடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், போராட்டக் குழுவினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். நீண்ட காலமாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது. இந்தச் சந்திப்பின் போது செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதிய உயர்வு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் எனச் செவிலியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இன்று மதியத்திற்குள் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகள் வெளியாகும் என்பதால், நந்திவரத்தில் குவிந்துள்ள செவிலியர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். செவிலியர்களின் நீண்ட காலக் கோரிக்கைக்கு அரசு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.