இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), தனது வலிமைமிக்க எல்.வி.எம்3-எம்6 (LVM3-M6) ராக்கெட் மூலம் அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘புளூ பேர்ட் பிளாக்-2’ (நீலப்பறவை செயற்கைக்கோள்) விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவுதல் டிசம்பர் 24, 2025 அன்று காலை 08:54 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திலிருந்து நடைபெறவுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஏ.எஸ்.டி ஸ்பேஸ்மொபைல்’ (AST SpaceMobile) நிறுவனத்துடன் இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல் – NSIL) மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மிஷன் செயல்படுத்தப்படுகிறது. விண்வெளியில் இருந்து நேரடியாக சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கே அதிவேக செல்லுலார் பிராட்பேண்ட் சேவையை வழங்குவதுதான் இந்தச் செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும்.
இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்களிலும் 4G மற்றும் 5G வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும்.
உலகிலேயே மிகப்பெரிய வணிக செயற்கைக்கோள்
விண்ணில் ஏவப்படவுள்ள ‘புளூ பேர்ட் பிளாக்-2’ பல வியக்கத்தக்க சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது:
இது 223 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அமைப்பைக் கொண்டது. தாழ்வான புவி வட்டப்பாதையில் (எல்.இ.ஓ) நிலைநிறுத்தப்படும் உலகின் மிகப்பெரிய வணிகத் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் இதுவே ஆகும்.
இஸ்ரோவின் LVM3 ராக்கெட் வரலாற்றிலேயே, தாழ்வான புவி வட்டப்பாதைக்குச் சுமந்து செல்லப்படும் மிக அதிக எடையுள்ள சுமை இதுவாகும்.
இஸ்ரோ ஏற்கனவே சந்திரயான்-2, சந்திரயான்-3 போன்ற முக்கிய ஆய்வுப் பணிகளையும், ஒன்வெப் (OneWeb) போன்ற சர்வதேச வணிகப் பணிகளையும் எல்.வி.எம்3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக முடித்துள்ளது. கடந்த நவம்பர் 2-ம் தேதி சி.எம்.எஸ்-03 (CMS-03) செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் இஸ்ரோ மேற்கொள்ளும் மற்றொரு மிகப்பெரிய மைல்கல்லாக இந்த டிசம்பர் 24 ஏவுதல் பார்க்கப்படுகிறது.
“உலகில் இணைய வசதி கிடைக்காத பில்லியன் கணக்கான மக்களுக்கு அதிவேக பிராட்பேண்ட் சேவையை கொண்டு சேர்ப்பதே எங்களது இலக்கு” என ஏஎஸ்டி ஸ்பேஸ்மொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக உலகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களுடன் அந்நிறுவனம் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.







