கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்று நுழைவாயில் அருகே நின்ற ஒரு தம்பதி திடீரென்று தங்கள் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் கையில் இருந்த தீப்பெட்டியை பறித்தனர் பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் ஆலாந்துறை அருகே உள்ள கிளியாக் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் (வயது 55) -நாகமணி (வயது 53) என்பது தெரியவந்தது.
அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது :-எங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு இலவசமாக 1.5 சென்ட் வீட்டுமனை இடத்துக்கான பட்டா வழங்கப்பட்டது. பட்டா எண் பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. இதை சரி செய்ய பேரூர் தாலுகா அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தோம். சரி செய்ய மறுத்து விட்டார்கள். எங்கள் இடத்தை 3 பேர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். இதனால் நாங்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலையில் உள்ளோம். வேறு வழியில்லாமல் தீக்குளிக்க முயன்றோம். பட்டா எண்ணை திருத்தி தராவிட்டால் மீண்டும் இதே போல் செய்வதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர்அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.








