தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள் முறையாக நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. முறையாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டால் தான், கட்சி கட்டமைப்பு நிறைவடையும் என தொடர்ந்து நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படாத பகுதிகளுக்கு, மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு, அறிவிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மற்றும் திருச்சி மாவட்டங்களுக்கு, 8 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்றவருக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
அந்த பகுதிக்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் என்பவர் நியமிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் அவரை அந்த பதிவில் நியமிக்காததால், அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அஜிதா ஆக்னல், கண்ணீருடன் அலுவலக வளாகத்தில் காத்திருந்தது மட்டுமல்லாமல், கட்சித் தலைவர் விஜயை சந்திக்க வேண்டும் என அங்கிருந்த நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். ஆனால், அலுவலக பாதுகாப்பு ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
அலுவலகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும், வளாகத்தில் தொடர்ந்து காத்திருந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் ஆதரவாளர்களுடன் வந்திருந்ததால், தமிழக வெற்றி கழகம் தலைமை அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் கட்சிக்காக நான் ஓடி ஓடி உழைத்திருக்கிறேன், ஆனால் எனக்கு உரிய பதவி கிடைக்கவில்லை மற்றும் தலைவரை சந்திக்க வாய்ப்பு கூட கிடைக்கவில்லை என வேதனையுடன் அவர் கண்ணீர் மல்க காத்திருந்தார்.
இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் பணிகளை முடித்துவிட்டு விஜய் திரும்பியபோது, அவரது காரை அஜிதா மறிக்க முயற்சி செய்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு இருந்த நிர்வாகிகள் மற்றும் தனியார் பாதுகாவலர்கள், அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களை அப்புறப்படுத்தினர்.








