விஜய்க்கு அழைப்பு விடுத்த தமிழிசை.!!

மிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று (23.12.2025) சென்னைக்கு வருகை தந்தார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியுடன், பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், பா.ம.க தே.மு.தி.க ஆகிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து அந்த கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய் வர வேண்டும் என பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ‘கூட்டணியில் உள்ள முக்கியத் தலைவர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு குடும்பமாக இருந்து இந்த தேர்தலை சந்திக்க போகிறோம். எதிர்க்கட்சி வாக்குகள் பிரிய கூடாது என்று நாங்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். விஜய் உட்பட எல்லோரும் சேர்ந்து வரவேண்டும் என்று சொல்லி வருகிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் தயாராக இருக்கிறோம். எங்கள் கூட்டணியால் திமுக கூட்டணி வெட வெடத்து போயிருக்கிறது. எந்த விழாவாக இருந்தாலும் பா.ஜ.க, பா.ஜ.க என இழுத்து இழுத்துப் பேசி உதயநிதி ஸ்டாலின் ஒரு பக்கம், திருமாவளவன் ஒரு பக்கம், முதல்வர் ஒரு பக்கம் என எல்லோருமே அரண்டு போயிருக்கிறார்கள், மிரண்டு போயிருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் எல்லாரும் ஜெயிப்பார்கள். அதனால், விஜய் தனியாக நிற்பதை விட எல்லோரும் இணைந்து நின்றோம் என்றால் வெற்றி இன்னும் சுலபமாக இருக்கும் என்று அவரிடம் மறுபடியும் மறுபடியும் சொல்கிறோம்’ என்று கூறினார்.