விண்ணில் பாய்ந்தது பாகுபலி.!!

விண்வெளித் துறையில் இந்தியாவின் பெயரை நிலை நாட்டுவதில் இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு, பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது.

இது தவிர வணிக நோக்கத்திற்காகவும் பிற நாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது.

இதன்படி அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 என்ற செயற்கைகோளை, LVM-3 M-6 என்ற ராக்கெட் மூலம் இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியுள்ளது. இதுவரை இஸ்ரோ செலுத்திய ராக்கெட்டுகளில் அதிக எடையுள்ள ராக்கெட் LVM-3 M-6 தான். இதனால் தான் இந்த ராக்கெட் இஸ்ரோவின் பாகுபலி என்று அழைக்கப்படுகிறது.

இன்று காலை சரியாக 8:54 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது LVM-3 M-6 ராக்கெட். அமெரிக்காவின் AST Space Mobile நிறுவனத்திற்குச் சொந்தமான BlueBird-6 என்ற செயற்கைகோளை, இன்று விண்ணில் செலுத்தியுள்ளது இஸ்ரோ. அமெரிக்காவின் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இஸ்ரோவின் NSIL நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.

அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோளை, LVM-3 M-6 ராக்கெட் உதவியுடன் விண்ணில் செலுத்துவதற்கான 24 மணி நேர கவுண்டவுன் நேற்று (டிசமபர் 23) செவ்வாய்க்கிழமை காலை 8:54 மணிக்கு தொடங்கியது. கவுண்டவுன் தொடங்கிய பிறகு, ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணிகளும் நிறைவு பெற்றன.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 24) காலை 8:54 மணிக்கு இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட் LVM-3 M-6, ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவு தளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவுதலை நேரடியாக பார்க்க பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும் போது, கடல் மார்க்கத்திற்கு எதிர்ப்புறம் உள்ள தமிழக கிராம மக்கள் ராக்கெட் ஏவுதலை நேரடியாக பார்ப்பது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சுண்ணாம்புகுளம் மற்றும் ஓபசமுத்திரம் உள்ளிட்ட கிராம மக்கள் ராக்கெட் ஏவுதலைக் காண கடற்கழி அருகே வந்திருந்தனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்டை சரியாக காண முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இருப்பினும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தகவல் தொடர்பை மேம்படுத்தவே ப்ளூபேர்டு-6 செயற்கைக்கோள் ஏவப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் சுமார் 6,100 கிலோ எடையும், 223 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.

சாதாரண ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் இணைய வசதியை விண்வெளியில் இருந்து நேரடியாக வழங்குவதே, இந்த செயற்கைக்கோளின் முக்கிய நோக்கம். இதன் மூலம் அடர்ந்த காட்டுப் பகுதிகள் மற்றும் செல்போன் டவர் இல்லாத பகுதிகளிலும் அதிவேக 5ஜி இணைய சேவை, வீடியோ அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை அனுப்ப முடியும்.

இதுவரை இஸ்ரோ செலுத்தியதிலேயே அதிக எடை கொண்ட ராக்கெட் LVM-3 M-6 என்பது குறிப்பிடத்தக்கது.