2026 தேர்தல் களம்… கைமாறும் வாய்ப்புகள்… TVK சர்வே?

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 30 சதவீத வாக்குப்பங்கைப் பெறும் என்றும், மக்கள் விஜய்யை முதலமைச்சராக விரும்புகிறார்கள் என்றும் கட்சி நடத்திய உட்கட்சி ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வின் அடிப்படையில், தி.மு.க. 104 இடங்களைப் பெற்று முன்னிலை வகிக்க, த.வெ.க. 74 இடங்களையும், அ.தி.மு.க. 56 இடங்களையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து த.வெ.க. வட்டாரங்கள் கூறுகையில், “தமிழக வெற்றிக் கழகம் தற்போது அதிக மக்களாதரவு பெற்ற கட்சியாக வளர்ந்துள்ளது. பல ஆய்வுகள் எங்களுக்கு 30 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் கிடைக்கும் என்பதை காட்டுகின்றன. தி.மு.க.வின் வாக்கு சதவீதம் 21 சதவீதத்தைத் தாண்டாது என்றும், ஜெயலலிதா இல்லாத சூழலில் அ.தி.மு.க. மீண்டும் பழைய வாக்கு வங்கியை பெற முடியாது என்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றனர். மேலும், “எங்கள் தலைவர் யாரையும் முதலமைச்சராக்க கட்சி தொடங்கவில்லை. மக்கள் தங்கள் தலைவரை முதலமைச்சராக்கவே எங்களை ஆதரிக்கிறார்கள்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் நடத்திய இந்த உட்கட்சி சர்வே தொடர்பாக ‘இந்தியா டுடே’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில் 41,453 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் தி.மு.க. 32.9 சதவீத ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாகவும், தொடர்ந்து த.வெ.க. 31.7 சதவீதம் மற்றும் அ.தி.மு.க. 27.3 சதவீத ஆதரவை பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 8.1 சதவீதம் வாக்காளர்கள் பிற கட்சிகளை ஆதரிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மாவட்ட வாரியான மதிப்பீட்டில், சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் த.வெ.க. வலுவான கோட்டைகளை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருக்கை கணிப்பின்படி, தி.மு.க. 104 இடங்கள், த.வெ.க. 74 இடங்கள் மற்றும் அ.தி.மு.க. 56 இடங்கள் பெறும் என அந்த உட்கட்சி ஆய்வு கூறுகிறது.

இதற்கிடையில், ஆளும் தி.மு.க. ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து நடத்தியதாகக் கூறப்படும் அதிகாரப்பூர்வமற்ற கருத்துக் கணிப்பும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. அந்த சர்வேயின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காளர் ஆதரவில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி இருப்பதாக கூறப்படுகிறது. நகரங்கள் மற்றும் மாநகரங்களில் த.வெ.க.க்கு 10 முதல் 15 சதவீதம் வரை ஆதரவு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் அந்த ஆதரவு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் த.வெ.க.க்கு நல்ல வரவேற்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறினாலும், தமிழ்நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால், அங்கு ஆதரவு குறைவாக இருப்பது கட்சிக்கு பெரிய சவாலாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியை த.வெ.க. எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பதே 2026 தேர்தலை நோக்கி எழும் முக்கியமான கேள்வியாக உள்ளது.