லக்னோ: பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தேசிய நினைவிடம் மற்றும் அதிநவீன அருங்காட்சியகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 25, 2025) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நினைவிட வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது பாரதிய ஜனதாவின் முக்கிய சித்தாந்தவாதிகளான ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகிய மூவரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. சுமார் 98,000 சதுர அடி பரப்பளவில், இந்தியாவின் தேசிய மலரான தாமரை வடிவில் இந்த அதிநவீன அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் தேசக் கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றிய தலைவர்களின் வரலாற்றையும், அவர்களின் பங்களிப்பையும் இளைய தலைமுறைக்கு எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) தளத்தில், “வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன். இந்த அதிநவீன அருங்காட்சியகம் தேசத்திற்காக உழைத்தவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புகளைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சுமார் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், உத்தரப் பிரதேசத்தின் முக்கியச் சுற்றுலா மற்றும் வரலாற்று மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய விழாவில் பிரதமர் மோடியுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.








