சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கோலாகலமாக நடக்கிறது. இதுதான் விஜய்யின் கடைசி இசை வெளியீட்டு விழா என்பதால் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்கு ரசிகர்களும், செலிபிரிட்டிகளும் மலேசியாவுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் அவர் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்தார். அந்தப் படத்துக்கு ஜனநாயகன் என்று பெயர் வைத்து ஹெச்.வினோத் இயக்குகிறார். இதில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு என பலர் நடிக்கிறார்கள். கேவிஎன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து இது தெலுங்கில் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்று சொல்லப்பட்டுவருகிறது. படத்துடைய முதல் சிங்கிளில் சில விஷயங்களை டீகோட் செய்து உறுதியாக அப்படத்துடைய ரீமேக் என பலரும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக வெளியாகும் போஸ்டரை வைத்து பார்க்கையில் முழுக்க முழுக்க அந்தப் படத்தை அப்படியே எடுத்திருக்கமாட்டார் என்றே தோன்றுகிறது.

படமானது ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க தமிழ்நாட்டில்தான் படத்துடைய ஆடியோ லான்ச் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கு அரசியல் மேடைகளில் விஜய் தீவிரமாக களமாடிவருவதால் தேவையில்லாத சிக்கல்கள் வரும் என்பதால்; எதை பற்றியும் யோசிக்காமல் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிட்டது படக்குழு.
அதன்படி நாளை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. பல ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கியிருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் அரசியல் சம்பந்தமான எதையும் பேசக்கூடாது, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பொருட்களை கொண்டுவரக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டிருக்கிறது மலேசிய அரசாங்கம். இது விஜய் ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்டை கொடுத்திருக்கிறது.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் , தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மலேசியாவுக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்கள் மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக லோகேஷ், நெல்சன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் படத்தில் சின்ன கேமியோ ரோலில் நடித்திருக்கிறார்கள் என ஒரு தகவல் ஓடுவதும் குறிப்பிடத்தக்கது.








