முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், அவரது அடக்கமான நகைச்சுவை உணர்வும் ராஜதந்திர நுணுக்கமும் வெளிப்படும் தனிப்பட்ட நினைவுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிர்ந்து கொண்டார்.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், 1999-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வாஜ்பாய் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க லாகூர் பேருந்து யாத்திரையின் போது நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். அணு ஆயுத சோதனைகளுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், இரு நாடுகளும் லாகூர் பிரகடனத்தில் கையெழுத்திட்ட அந்தச் சூழலில், வாஜ்பாய் எடுத்த நடவடிக்கைகள் அவரது ராஜதந்திரத் திறனை வெளிப்படுத்தியதாக ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
அதாவது ஒரு பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளரிடம் வாஜ்பாயிடம் என்னை நீங்கள் திருமணம் செய்து கொள்வீர்களா என்றும் அதற்கு பதிலாக காஷ்மீரை வரதட்சணையாக தருவீர்களா என்றும் கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த வாஜ்பாய் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய நிலையில் அதற்கு பதிலாக பாகிஸ்தானையே அவர் வரதட்சணையாக கேட்டுள்ளார்.
மேலும், 2006-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில், ‘ஈராக் எண்ணெய்க்கு உணவு’ விவகாரத்தில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் பலிகடாவாக்கப்பட்டாரா?’ என்று பத்திரிகையாளர்கள் வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் அளித்த பதிலையும் ராஜ்நாத் சிங் நினைவு கூர்ந்தார்.
அப்போது, அந்த அரசியல் கேள்விக்கு நேரடி பதில் அளிக்காமல், “நான் ஒரு சைவ உணவு உண்பவன்” என்று நகைச்சுவையுடன் பதிலளித்து, சூழலைத் திசைதிருப்பிய வாஜ்பாயின் கூர்மையான சொற்பொழிவு திறன் அனைவரையும் கவர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிஹாரி வாஜ்பாய், மூன்று முறை இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றியவர். இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை மேம்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக மட்டுமல்லாமல், அவரது அரசியல் நுட்பம், கூர்மையான நகைச்சுவை மற்றும் தனித்துவமான பேச்சு நடை காரணமாகவும் அவர் நினைவுகூரப்படுகிறார்.
நீண்டகால உடல்நலக் குறைவால், வாஜ்பாய் 2018 ஆகஸ்ட் 16-ம் தேதி, 93 வயதில் காலமானார்.









