மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு..

கொடைரோடு அருகே, ராமராஜபுரத்தில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், வரதட்சனை கேட்டு, கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள, இராமராஜபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30) மைக் செட் உரிமையாளரான இவருக்கும், சடையாண்டிபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான, சேகர்-நாகலட்சுமி தம்பதியரின் மகள் சிவகாமி (26)
என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி உள்ளது.

இவர்களுக்கு 3-வயதில் சுபஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், சிவகாமியிடம் வரதட்சணை கேட்டு கணவன் மனைவி இடையை அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகாமி வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சிவகாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவகாமி கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்து வந்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த சிவகாமியின் உறவினர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு வரதட்சணை கொடுமையால் சிவகாமி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணமான அவரது கணவன் உட்பட 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, காலை 9 மணியிலிருந்து தற்போது வரை தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மையநாயக்கனூர் காவல் நிலையம் முற்றுகை மற்றும் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.