125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த ஏராளமான தோடர் பழங்குடியின ஆண்கள், நகரின் மைய பகுதியில் வட்டமாக நின்றவாறு, பாரம்பரிய நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கேர்ன்ஹில் பகுதியில், 125 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டிற்கான 114-ஆம் ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் ஊர்வலம், நடைபெற்றது. தேரை தோடர் பழங்குடியின ஆண்கள், கோவிலில் இருந்து வடம் பிடித்து, உதகை மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் வழியாக மாரியம்மன் கோவிலுக்கு இழுத்து வந்தனர். அப்போது ஏராளமான பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒன்று கூடிய தோடர் இன பழங்குடியின ஆண்கள், வட்டமாக நின்று ஒருவருக்கொருவர் கைகளை கோர்த்தவாறு, தங்களது பாரம்பரிய நடனம் ஆடினர். அப்போது அவர்கள் புத்தாண்டில் நல்ல மழை பெய்ய வேண்டும், மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என தங்களது மொழியில் பாடல்களைப் பாடி, பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர்.









