விலையை கேட்டாலே இனி ஷாக் அடிக்கும்..!!

தொழில்நுட்ப உலகில் தற்போது ‘ஹாட் டாபிக்’ என்றால் அது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தான். ஆனால், இந்த ஏ.ஐ-யின் அசுர வளர்ச்சி இப்போது உங்க பாக்கெட்டைப் பதம் பார்க்கத் தொடங்கியுள்ளது.

ஆம், ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களின் விலை அதிரடியாக உயரப்போகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை இயக்கத் தேவையான தரவு மையங்களுக்கு மிக அதிகமான RAM மற்றும் SSD தேவைப்படுகின்றன. இதனால், கடந்த சில மாதங்களிலேயே இவற்றின் விலை 2 முதல் 3 மடங்கு வரை எகிறியுள்ளது.

உலக சந்தையில் 70% பங்கைக் கொண்டுள்ள சாம்சங் (Samsung) மற்றும் எஸ்.கே ஹெய்னிக்ஸ் (SK Hynix) ஆகிய நிறுவனங்கள், “இந்த வருஷம் முழுமைக்கும் எங்களிடம் ஸ்டாக் இல்லை, எல்லாமே இப்போதே விற்றுத் தீர்ந்துவிட்டது என கைவிரித்துள்ளன. இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ஐ.டி.சி ஒரு அதிர்ச்சியான எச்சரிக்கையை விடுத்துள்ளது. “மலிவான விலையில் தாராளமாகக் கிடைத்த மெமரி மற்றும் ஸ்டோரேஜ் காலம் முடிந்துவிட்டது” என்பதே அது. இந்த தட்டுப்பாடு இப்போதைக்கு முடியாது, குறைந்தது 2027 வரை நீடிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

Dell, Lenovo, Xiaomi, Raspberry Pi போன்ற முன்னணி நிறுவனங்கள், தங்கள் சாதனங்களின் விலையை 5% முதல் 20% வரை உயர்த்தத் திட்டமிட்டு உள்ளன. Asus ஏற்கனவே ஜனவரி 5 முதல் விலையேற்றத்தை அறிவித்துவிட்டது. Dell தனது உயர்ரக மெமரி பாகங்களின் விலையை சுமார் $55 முதல் $765 வரை (இந்திய மதிப்பில் பல ஆயிரம் ரூபாய்) உயர்த்தத் தயாராகி வருகிறது. Lenovo விலையேற்றத்தில் இருந்து தப்பிக்க, இப்போதே மெமரி சிப்களை டன் கணக்கில் பதுக்கி (Stockpile) வைக்கத் தொடங்கியுள்ளது.

ஆப்பிள் (Apple), சாம்சங் போன்ற ஜாம்பவான்கள் சிப் தயாரிப்பு நிறுவனங்களுடன் நீண்டகால ஒப்பந்தம் வைத்துள்ளதால், இப்போதைக்கு அவர்கள் பெரியளவில் விலையை உயர்த்த மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஐ-க்கான தேவை மலை போல உயர்ந்து வருவதால், புதிய லேப்டாப் அல்லது மொபைல் வாங்கும் திட்டம் இருந்தால், இப்போதே வாங்குவது புத்திசாலித்தனம். இல்லையெனில், இன்னும் சில மாதங்களில் கூடுதல் தொகையைச் செலவழிக்க வேண்டி வரும் என்கின்றனர் நிபுணர்கள்.