உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை, அமெரிக்காவின் 52-வது மாநிலமாக மாற்ற ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதற்காக ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தை முதல் ராணுவ நடவடிக்கை வரை அனைத்து வழிகளும் பரிசீலனையில் இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை எப்படியாவது வசப்படுத்த அமெரிக்கா மூன்று முக்கியத் திட்டங்களை வகுத்துள்ளது:
1867-ல் ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவை வாங்கியது போல, டென்மார்க்கிற்குப் பெரும் தொகையைக் கொடுத்து கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது. இதற்காக “மேக் கிரீன்லாந்து கிரேட் அகைன்” (Make Greenland Great Again Act) என்ற சட்ட மசோதாவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. கிரீன்லாந்தைச் சுதந்திர நாடாக அறிவிக்க வைத்து, அதன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை மட்டும் அமெரிக்கா கவனித்துக்கொள்வது. பசிபிக் தீவு நாடுகள் சிலவற்றுடன் அமெரிக்கா ஏற்கனவே இந்த முறையைப் பின்பற்றி வருகிறது. இது கடைசித் தேர்வாக (Last Resort) மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது. நேட்டோ (NATO) அமைப்பில் டென்மார்க்கும் உறுப்பினர் என்பதால், ராணுவ பலத்தைப் பயன்படுத்துவது பெரும் சிக்கலை உருவாக்கும். இருப்பினும், “ராணுவத்தைப் பயன்படுத்துவதும் ஒரு வாய்ப்பாகவே உள்ளது” என்று வெள்ளை மாளிகை கூறியிருப்பது ஐரோப்பிய நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பனி படர்ந்த கிரீன்லாந்து மீது அமெரிக்கா இவ்வளவு வெறித்தனமாக இருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன:
கிரீன்லாந்தின் பனிக்கடியில் அரிய வகை கனிமங்கள் (Rare Earth Minerals), தங்கம், வைரம் மற்றும் எண்ணெய் வளம் கொட்டிக் கிடக்கிறது. எதிர்காலத் தொழில்நுட்பத்திற்குத் தேவையான இந்தக் கனிமங்கள் மீது சீனா (China) கண் வைப்பதற்கு முன், அதைத் தான் கைப்பற்ற வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது.
ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த கிரீன்லாந்து ஒரு கேந்திரமான இடம். அங்கு ஏவுகணைப் பாதுகாப்புத் தளங்களை (Missile Defense Systems) அமைப்பதன் மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; அது டென்மார்க்கின் பகுதி மட்டுமல்ல, கிரீன்லாந்து மக்களுக்கே சொந்தமானது” என்று டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த ட்ரம்ப், இப்போது ஒரு நாட்டையே விலைக்கு வாங்க நினைப்பது உலக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது வெறும் நில ஆக்கிரமிப்பு மட்டுமல்ல, ஆர்க்டிக் பிராந்தியத்தின் எஜமான் யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டி!








