கோவை அருகே மதுக்கரை வனச்சார பகுதியில் யானை, சிறுத்தை ,புலி, மான் காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி வனப்பகுதி ஒட்டிய பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கோவை புதூரை சேர்ந்தவர் சிவசாமி ( வயது 57 ) தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று வேலை முடிந்து பாலக்காடு – கோவை ரோட்டில் கோவை புதூர் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் மீது ஒரு வனவிலங்கு பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது .இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மதுக்கரை உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே சிவசாமி மீது பாய்ந்தது கருஞ்சிறுத்தை என்ற தகவல் காட்டு தீ போல பரவியது.உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் கருஞ் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொறுத்தி வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-சிவசாமியிடம் விசாரித்த போது ஏதோ ஒரு வன விலங்கு தன் மீது பாய்ந்ததாகவும், அது பெரியதாக இருந்ததாகவும் கூறினார். அங்கு ஆய்வு செய்ததில் எந்த விலங்கின் கால் தடமும் இல்லை. எனவே தானியங்கி கேமரா வைத்து ஆய்வு செய்து வருகிறோம். என்றனர்.






