கோவை அருகே பஸ்சில் ரூ 48 லட்சம் ஹவாலா பணம் கடத்திய வடமாநிலவாலிபர் கைது.

கோவை ஜூலை 16 சென்னை பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கோவை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன .இந்த வாகனங்களில் ஹவாலா பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத தங்க நகைகள், தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை கண்டுபிடிப்பதற்கு கேரள போலீசார் அடிக்கடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள் .இந்த நிலையில் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு வரும் பஸ்சில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக பாலக்காடு மாவட்ட கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே கலால் துறை அதிகாரிகள் கோவை அருகே வாளையார் சோதனை சாவடியில் அதிரடி சோதனைகள் ஈடுபட்டனர் .அவர்கள் அந்த வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது கோவையில் இருந்து பாலக்காடு வழியாக கொச்சிக்கு செல்லும் பஸ் வந்தது .அந்த பஸ்சுக்குள் ஏறி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த பஸ்சில் பயணம் செய்த ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதற்குள் கட்டு கட்டாக பணம் இருந்தது. உடனே அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் அசோக் யாதவ் (வயது 30) என்பதும் கொச்சிக்கு பணத்தை கொண்டு செல்வதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரிடம் அந்த பணத்துக்கான ஆவணங்களை கேட்டனர் .ஆனால் அவரிடம் ஆவணங்கள் எதுவும் இல்லை, மேலும் அந்த பணம் ஹவாலாபணம் என்பதும் பெங்களூரில் இருந்து கொச்சிக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் கணேஷ் அசோக் யாதவிடம் கட்டு கட்டாக இருந்த ஹவாலா பணம் ரூ. 48 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.