வீடு புகுந்து பால் வியாபாரி வெட்டிக்கொலை

2பேர் கைது.கோவை ஜூலை 9கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆயர்பாடியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 23) பால் வியாபாரி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். திருமணமான அவரது தங்கைக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது .இதனால் தங்கை பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். வீட்டில் இடம்பற்றாக்குறை காரணமாக சஞ்சய் குமார் அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பால் வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சஞ்சய் குமார் சாப்பிட்டுவிட்டு இரவில் அந்த வாடகை வீட்டிற்கு தூங்கச் சென்றார். வழக்கமாக சஞ்சய் குமார் அதிகாலையில் எழுந்து பால் கறப்பதற்காக சென்று விடுவார். ஆனால் நேற்று அதிகாலை வெகுநேரமாகியும் சஞ்சீவ் குமார் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை .இதனால் சந்தேகம்அடைந்த அவரது தாய் அந்த வீட்டுக்கு சென்றார் வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது சஞ்சய் குமார் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சடைந்த அவர் கதறி அழுதார். இதுகுறித்து உடனடியாக காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் டி. எஸ். பி .அதியமான், காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ( பொறுப்பு) சின்னகா மணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சஞ்சய் குமார் உடலில் கழுத்து நெஞ்சு, இடுப்பு வயிறு உள்ளிட்ட 4 இடங்களில் அரிவாள் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தது. அவரை மர்ம நபர்கள் யாரோ வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த பகுதியில் சுற்றி வந்தது .ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சஞ்சய் குமாரை கொலை செய்தது அதை பகுதியைச் சேர்ந்த கண்ணன் ( வயது 20) நாகராஜ் ( வயது 19) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.