கோவை ஜூலை 8அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் இருந்து நேற்று தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார் இ.பி.எஸ். எந்த ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும் வனபத்ரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கினால் கைகூடும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. அதன்படியே திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் உன்னத நோக்கத்தில் சுற்றுப்பயணம் தொடங்கப்படுவதால் இந்த கோயிலை இ.பி.எஸ் தேர்வுசெய்திருக்கிறார்.
காலை 9 மணி முதலே கோயிலுக்கு பக்தர்களும், அதிமுகவினரும் சாரை சாரையாக வரத் தொடங்கினர். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், பா.வளர்மதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன், சிங்கை எம்.எல்.ஏ ஜெயராமன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ ஏ.கே.சின்ராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி, மாணவர் அணித் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சரியாக 9.40 மணியளவில் கோயிலுக்கு வந்த இ.பி.எஸ் அவர்களுக்கு பட்டாசு வெடித்தும், மேளதாளங்களை இசைத்தும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் என பலரும் பூங்கொத்து கொடுத்து இ.பி.எஸ்ஸை வரவேற்றனர். பக்தர்கள் சிலர் தங்களது பிள்ளைகளுடன் வந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றனர். வழிபாடு நடத்தி முடித்த பின்னர், கோயில் பிரகாரத்தில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினார் இ.பி.எஸ்.
மத்திய அரசு சார்பில் இ.பி.எஸ் அவர்களுக்கு ” இசட் பிளஸ்” பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அதன்படி இன்றுமுதல் இசட் பிளஸ் பாதுகாப்பில் தான் இ.பி.எஸ் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார். கோயிலில் வழிபாடு, அன்னதானம் முடிந்த பின்னர் கோயிலில் இருந்து புறப்பட்டவர் நேரடியாக அருகிலுள்ள அம்மை அப்பன் மண்டபத்தில் நடக்கும் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.இன்று காலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.அப்போது நடை பயிற்சிக்கு சென்றவர்களிடம் கலந்துரையாடினார்.இதையொட்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி உட்பட அதிமுக நிர்வாகிகள் சென்றனர்.