அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு..!!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது; பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக முடிவடைந்தது” என்றார்.

பாஜகவிற்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, “எண்ணிக்கையை இப்போது சொல்ல முடியாது, பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என்று அவர் பதிலளித்தார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தமிழகம் வரவிருப்பதாகவும், அவரது வருகையின்போது கூட்டணிக் கட்சிகளின் பலம் நிரூபிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், திமுக கூட்டணிக்கு ஒரு வலுவான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.