கோவை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையமானது 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6ஆண்டுகளாக நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் போட்டியிடாத, அங்கீகரிக்கப்படாத, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பதிவினை ரத்து செய்திட உத்தேசித்துள்ளது.
அதன் படி அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில்கூட போட்டியிடவில்லை என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அத்தகைய கட்சிகளுக்கு அவர்களின் பதிவினை ஏன் ரத்து செய்யப்படக்கூடாது என்பதற்கான காரணத்தினை தெரிவிக்க அறிவுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் அலுவலரால் விளக்கம் கோரும் அறிவிப்பாணை சார்வுசெய்யப்பட்டுள்ளது. இந்நேர்வில் கோவை மாவட்டம், பாரதியார் பல்கலைகழகம் (அஞ்சல்), கல்வீரம்பாளையம், நால்வர் நகர், எனும் முகவரியில் செயல்படும் “அனைத்திந்திய தமிழக முன்னேற்ற கழகம்” மற்றும் கோவை மாவட்டம், பொள்ளாச்சி பிரதான சாலை, கற்பகம் பல்கலைகழகம் எதிர்புறம், செயல்படும் “தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி” ஆகிய இரு கட்சிகளும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவிலை என இந்திய தேர்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடர்புடைய இரண்டு கட்சிகளுக்கும் தங்கள் தரப்பு கருத்துகளை நேரில் எடுத்துரைத்திட வாய்ப்பளிக்கும் விதமாக சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் வரும் 26ம் தேதி நேரில் ஆஜராகிட தலைமைப் பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவுற்ற பின்னர் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியால் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். இதன் பேரில் இந்திய தேர்தல் ஆணையம் தனது இறுதி உத்தரவை பிறப்பிக்கும்.இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0