பாகிஸ்தான் அணு ஆயுத கிடங்கு மீது தாக்குதலா? – இந்திய விமானப் படை அதிகாரி விளக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதலின் போது அந்நாட்டு அணு ஆயுத கிடங்கை இந்திய ஆயுதப் படைகள் குறி வைக்கவில்லை என விமானப் படை அதிகாரி ஏ.கே.பார்தி கூறினார்.பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்களிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் 25 நிமிடங்கள் நீடித்தது. இதில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.இதையடுத்து ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி பாகிஸ்தான் படைகள் 3 முறை தாக்குதல் நடத்த முயன்றன. இந்த தாக்குதல் முயற்சியை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.இந்நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிப்பு குறித்து முப்படைகளின் உயரதிகாரிகள் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் கூறுகையில், ‘பாகிஸ்தான் தாக்குதல் முயற்சியின்போது எதிரி விமானம் எதுவும் இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் எல்லைக்குள் வைத்தே அவை அழிக்கப்பட்டன.மிக் 29 கே ரக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் தயார் நிலையில் இருந்த கடற்படை போர் கப்பல், எதிரிகளின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உடனுக்குடன் தடுத்து அழித்தது. இதற்கு சென்சார் கருவிகளை கடற்படை திறம்பட பயன்படுத்திக் கொண்டது. வானின் அனைத்து பரப்புகளில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக இந்திய கடற்படை உள்ளது” என்றார்.விமானப் படை நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஏர் வைஸ் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறுகையில், ‘பாகிஸ்தானால் ஏவப்பட்ட ஏராளமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற விமானப் படை வீரர்களால் முறியடிக்கப்பட்டது. எங்கள் அனைத்து ராணுவ தளங்களும் அமைப்புகளும் தொடர்ந்து முழுமையாக செயல்பட்டு வருகின்றன, எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன.’ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் மிராஜ் போர் விமானம் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த விமானத்தின் பாகங்கள் நொறுங்கி கிடப்பதை காணலாம்” என்றார்.அணு ஆயுத கிடங்கு: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம், கிரானா ஹில்ஸ் பகுதியில் உள்ள குகைகளில் பாகிஸ்தான் அணு ஆயுதம் சேமித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது, கிரானா ஹில்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதன் காரணமாகவே பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முன்வந்ததாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி அளித்த பதிலில், ‘கிரானா ஹில்ஸ் பகுதியில் அணு ஆயுதங்கள் இருப்பதாக எங்களிடம் கூறியதற்கு நன்றி. அதுபற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. கிரானா ஹில்ஸ் பகுதியில் என்ன இருந்தாலும் சரி. அப்பகுதியை நாங்கள் தாக்கவில்லை” என்றார்.