பஸ் – கார் நேருக்கு நேர் மோதல் : வாலிபர் சாவு

கோவை 29 கோவை அருகே உள்ள வேலாந்த வளத்தை சேர்ந்தவர்கள் பாலகிருஷ்ணன் ( வயது 33) சரவணகுமார், இவர்கள் 2 பேரும் நேற்று முன் தினம் கேரளாவில் இருந்து காரில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உறவினர் பிறந்தநாள் விழாவுக்கு சென்றனர். அதனை முடித்துவிட்டு நேற்று காலையில் காரில் கேரளாவுக்கு புறப்பட்டனர். காரை பாலகிருஷ்ணன் ஓட்டினார். கார் கோவை நீலாம்பூரை அடுத்த வெள்ளலூர் பிரிவு அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை பாலகிருஷ்ணன் முந் தி செல்ல முயன்றார். அப்போது கோவையில் இருந்து பெங்களூர் நோக்கி வந்த பஸ் மீது கார் நேருக்கு நேர் மோதியது . இந்த விபத்தில் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் இறந்தார். காரில் இருந்த சரவணக்குமார், பஸ் டிரைவரான கர்நாடக மாநிலம் கோலார் பகுதியைச் சேர்ந்த ரகுநாத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.உயிரிழந்த பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.