கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. பள்ளி அரையாண்டு விடுமுறையை ஒட்டி பெரும்பாலானோர் குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், சேலம், நெல்லை, மதுரைக்கு 780 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். டிசம்பர் 23 ஆம் தேதி 255 சிறப்புப் பேருந்துகளும், டிசம்பர் 24 ஆம் தேதி 525 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. டிசம்பர் 23 மற்றும் 24ஆம் தேதிகளில், கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 91 சிறப்புப் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், 28ஆம் தேதி ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது . சிறப்பு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 14ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இணையதளம் மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, விடுமுறை காலத்தை ஒட்டி தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையிலிருந்து நெல்லை செல்வதற்கு ஆயிரத்து 400 ரூபாய் முதல் ஆயிரத்து 800 ரூபாய் வரை வழக்கமாக கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு வழக்கமான நாட்களில் 800 ரூபாய் முதல் ஆயிரத்து 1200 வரை வசூலிக்கப்படும். ஆனால் தற்போது 3,000 முதல் 5,000 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் நாகர்கோவில் செல்வதற்கு அதிகபட்சமாக 4,000 ரூபாயும், திருச்சி செல்வதற்கு 3600 ரூபாய் வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வு, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.









