முதியவரை அடித்து கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது.

கோவை செப்டம்பர் 18 திருவண்ணாமலையை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 60) இவர் கோவை ஆர். எஸ் .புரம் .பகுதியில் ரோட்டோரத்தில் தங்கி பிச்சை எடுத்து வந்தார் .அவர் கடந்த மாதம் 27-ஆம் தேதி காமராஜர் புரம் பகுதியில் உள்ள ஒரு கடை முன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து ஆர். எஸ் புரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சீனிவாசனின் தலையில் தாக்கியதற்கான காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாரோ அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த வேல்முருகன் ( வயது 34 )என்பவர் தான் சீனிவாசனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி திருப்புவனத்தில் உள்ளதனது வீட்டில் பதுங்கியிருந்த வேல்முருகனை மடக்கி பிடித்து கோவைக்கு அழைத்து வந்தனர். விசாரணையில் வேல்முருகன் கோவையில் இரவில் ரோட்டோரம் நடைபாதையில் தங்கி கிடைக்கும் வேலைக்கு சென்றதும், வேலை கிடைக்காத நேரத்தில் பிச்சை எடுத்து வந்து உள்ளார் .இது தொடர்பாக கடந்த 27-ஆம் தேதி வேல்முருகனுக்கும் சீனிவாசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சீனிவாசனை அடித்து கொலை செய்தது தெரியவந்தது .இதை யடுத்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.