பெய்ஜிங்: பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா இன்று காலை நடத்திய ராணுவ நடவடிக்கையை ‘வருந்தத்தக்கது’ என சீனா வர்ணித்துள்ளது.பதற்றத்தைக் குறைக்க இரு நாடுகளும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது. இரு நாடுகளையுமே வலியுறுத்தும் அதே நேரத்தில் இந்தியாவிற்கு எதிராக, முந்தைய காலம் போல சீனா கண்டனமோ அல்லது கடுமையான கருத்து, எதையும் பதிவு செய்யாமல் பம்மிக் கொண்டது.சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா இன்று காலை நடத்திய ராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கது. தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் அண்டை நாடுகளே. அவை இரண்டுமே சீனாவின் அண்டை நாடுகள். சீனா பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் எதிர்க்கிறது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் பரந்த நலன்களை கருத்தில் கொண்டு இரு தரப்பும் அமைதியாக இருந்து, கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும், மேலும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.பாகிஸ்தானின் ‘இரும்புப் போன்ற நெருங்கிய நட்பு நாடான’ சீனா, பஹல்காம் தாக்குதலைக் கண்டித்த போதிலும், கட்டுப்பாடுடன் செயல்படவும், தாக்குதல் குறித்து விரைவான விசாரணை நடத்தவும் கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வந்தது. இதற்கிடையில், இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திர தொடர்புகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாத் டார் ஏப்ரல் 27 அன்று சீனாவின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் யியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பாகிஸ்தானில் உள்ள சீனத் தூதர் ஜியாங் ஜைடாங், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அதிபர் ஆசிப் சர்தாரி ஆகியோரையும் சந்தித்தார்.பாகிஸ்தானின் துணைப் பிரதமருடன் தொலைபேசியில் பேசிய வாங் யி, நிலைமைகளை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை எதிர்ப்பது உலகளாவிய பொறுப்பு எனவும் வலியுறுத்தினார். மோதல் இந்தியா அல்லது பாகிஸ்தான் இருவரின் அடிப்படை நலன்களுக்கும் உதவாது, பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்காது என்பதால், முடிந்தவரை விரைவில் பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவளிப்பதாகக் கூறினார்.”இரும்புப் போன்ற நண்பராகவும், அனைத்து காலகட்டங்களிலும், கூட்டுப் பங்காளராகவும், பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை சீனா முழுமையாகப் புரிந்துகொள்கிறது மற்றும் பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதற்கு ஆதரவளிக்கிறது’ என்று வாங் கூறியிருந்தாலும், ஒட்டுமொத்த செய்தியானது பதற்றத்தைத் தணிப்பது மற்றும் இரு தரப்பும் கட்டுப்பாடு காப்பது என்பதையே வலியுறுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.இது, இத்தகைய ராணுவ மோதல் சூழலில் சீனா வழக்கமாக பாகிஸ்தானுக்கு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவில் இருந்து சற்று விலகி நிற்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. பிராந்தியத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதையே சீனா முதன்மையாக வலியுறுத்துகிறது. இதன் மூலம் பாகிஸ்தானை சீனா கைவிட்டுவிட்டதாக தெரிகிறது. இந்தியாவின் சந்தை தற்போது சீனாவுக்கு தேவையென்பதால் சீனா தனது வாலை சுருட்டுவதை தவிர இப்போது வேறு வழியில்லை என்பது உண்மை.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0