கோவை காந்திபுரம் அரசு விரைவு பஸ் நிலையம் விரைவில் இடமாற்றம்

கோவை ஆகஸ்ட் 21 கோவை காந்திபுரத்தில் அரசு விரைவு பேருந்து கழக பஸ் நிலையம் உள்ளது .இங்கு சென்னை, பெங்களூர் நாகர்கோவில், திருச்சி ,தூத்துக்குடி உட்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கேரள மாநில போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில போக்குவரத்து கழக விரைவு பஸ்களும் அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்த நிலையில் காந்திபுரம் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது .இதனால் அரசு விரைவு பஸ் நிலையத்தை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது .இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:- காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் இந்த பஸ் நிலையத்தை மேட்டுப்பாளையம் ரோடு பஸ் நிலையத்துக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மேம்பால பணிகள் நடைபெறுவதால் மேம்பால பணிகள் முடிவடைந்த பின்னர் மாற்றலாமா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பஸ் நிலையம் மாற்றப்படுவது உறுதி. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.