கோவை கிராமப்புறங்களில் ரோந்து பணிக்குஉள்ளூர் வாலிபர்களை ஈடுபடுத்த முடிவு

கோவை மே 9 கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு,டாக்டர். கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான்பேட்டை, நெகமம், வடக்கி பாளையம், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் பண்ணை வீடுகள் அதிகம் உள்ளன. இது தவிர தோட்டங்களில் தனி வீடுகளும் அதிகமாக இருக்கின்றன. அவற்றை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் தலா 5 சிறப்பு குழு நியமிக்கப்பட்டு உள்ளது.அவர்கள் கணக்கெடுக்கும் போது பண்ணை வீடுகள் மற்றும் தனி வீடுகளில் வசிப்பவர்கள் ,நள்ளிரவு நேரத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கக்கூடாது. நள்ளிரவில் முன் பின் தெரியாத நபர்கள் கதவைத் தட்டினால் திறக்க கூடாது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன் எச்சரிக்கை அலாரம், எல்லாரும் சுற்றுசுவரில் பாதுகாப்பு வசதி ஆகியவை பொருத்த வேண்டும். பாதுகாப்புக்கு நாய்கள் வளர்க்கலாம் .இவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.அதேபோன்று கிராமங்களில் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் தமிழக – கேரளா எல்லையில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதில் புது முயற்சியாக கிராமங்களை சேர்ந்த வாலிபர்களை தன்னார்வலர்களாக களத்தில் இறக்கி அவர்களை  பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம் மேலும் அந்த வாலிபர்களை போலீசாருடன் இணைத்து ” வாட்ஸ் அப் ” குழு தொடங்கப்படும். அந்த வாலிபர்கள் போலீசாருன் இணைந்து ரோந்து செல்வார்கள். இதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படும். அப்படி ரோந்து செல்லும் போது கிராமங்களுக்குள் சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் உள்ளூர் வாலிபர்கள் எளிதாக அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள். அதன் மூலம் குற்ற செயல்கள் நடப்பதை தடுக்கலாம். எனவே இதற்காக ஆர்வம் கொண்ட வாலிபர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.