ஓடும் லாரியில் ஓட்டுநர் திடீர் மரணம்..

கோவை அருகே உள்ள பேரூர், கணேஷ் நகரை சேர்ந்தவர் குமார் ( வயது 51) லாரி டிரைவர் .இவர் நேற்று முன் தினம் இரவு சரவணம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு சிலிக்கான் ரோடு ஏற்றி வந்துள்ளார். லாரியில் தர்மபுரி பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்த இளையரசு (வயது 29) என்பவர் கிளீனராக வேலை பார்த்து உள்ளார். சரவணம்பட்டி – துடியலூர் சந்திப்பில் லாரி சென்று கொண்டிருந்தபோது குமாருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி ஸ்டிரிங்கில் சாய்ந்தார். இதனால் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த 4 கார்கள் மீது மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிளீனர் இளையரசு துரிதமாக செயல்பட்டு பிரேக்கை அழுத்தி லாரியை நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டமாக காரில் வந்தவர்களுக்கு எந்த காயம் ஏற்படவில்லை .அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து லாரி டிரைவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..