கோவையில் போக்குவரத்து விதிகளை மீறிய 21, 284 பேரின் “டிரைவிங் லைசன்ஸ்” ரத்து. ரூ 12 கோடி அபராதம்.

கோவை மே 13 கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காகபோலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்கள் உட்பட போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.போக்குவரத்து விதிமுறைகளை அடிக்கடி மீறுபவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கோவை மாநகர பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் 30 -ஆம் தேதி வரை செல்போன் பேசியபடி வாகன ஓட்டியது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றது காரில் சீட் பெல்ட் போடாமல் சென்றது உட்பட போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக மொத்தம் ரூ12 கோடியே 81 லட்சத்து 13ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதில் ரூ 4 கோடியே 25 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது .ஆனால் கடந்தாண்டு இதே 4 மாதத்தில் ரூ. 11 கோடி தான் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது அதில் 3 கோடியே 46 லட்சம் வசூலிக்கப்பட்டிருந்தது. போக்குவரத்து விதிகளை அடிக்கடி மீறியதாக கடந்த 4 மாதத்தில் மட்டும் 27, 279பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.இதில் 21,284 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 5,995 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.