குடிபோதையில் தொழிலாளி கொலை . 2 பேருக்கு வலை

கோவை மே 14 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது 2 நண்பர்களுடன் ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அவர்கள் அங்குள்ள பாரில் அமர்ந்து மது குடித்தனர் .பின்னர் அவர்கள் 3பேரும் காந்திபுரம் 100 அடி ரோடு, ஜி.பி.சிக்னல் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது தினேஷுக்கும் மற்ற 2 பேருக்கும் இடையே திடீரென்று வாய் தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரமடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து தினேஷை சரமாரியாக தாக்கினர் .அவரும் பதிலுக்கு தாக்கினார் .இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 பேரும் சேர்ந்து தினேசை பிடித்து கீழே தள்ளினர். பின்னர் ரோட்டின் ஓரத்தில் கிடந்த கல்லை எடுத்து தினேசின் தலையில் ஓங்கி போட்டனர் .இதில் பலத்த காயமடைந்த தினேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பிணமானார். உடனே அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரோடு ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக கிடைப்பதை பார்த்து காட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் பிணமாக கிடந்தது கட்டிட தொழிலாளி தினேஷ் என்பதும், நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது .இதையடுத்து போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்..