கோவையில் கார் மோதி மின் கம்பம் உடைந்து விழுந்தது

கோவை அக்டோபர் 23 கோவை டாடாபாத் பகுதியில் இருந்து வி. கே.கே.மேனன் ரோடு வழியாக உயர் அழுத்த மின் கம்பிகள் செல்கின்றன. இதற்காக சாலையின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன. அவை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சில மின்கம்பங்களின் அடிப்பாகம் துருப்பிடித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் அந்த வழியாகச் சென்ற ஒரு கார் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து ஒரு மின்கம்பத்தின் மீது மோதியது .இதில் அந்த மின்கம்பம் உடைந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அப்போது அந்த சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை. மின்கம்பம் விழுந்ததால் மின்கம்பிகள் சேதம் அடைந்தது .அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதி இருளில் மூழ்கியது. மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து உடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் நட்டினர். மேலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளுக்கு மாற்று வழி மூலம் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.