தமிழகத்தில் உள்ள அனைத்து குடியிருப்பு, தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குதல் மற்றும் மறு பெயரிடுதல் தொடர்பாக, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. கோவையில் ஒன்பதாம் தேதி புதிதாக திறக்கப்பட உள்ள அவினாசி மேம்பாலத்தின் பெயர், ஜிடி நாயுடு என அறிவிக்கப்பட்டது, மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு ஜாதி, மதம், பாலினம், செல்வம், அதிகாரம் போன்ற எந்த ஒரு காரணத்தாலும் வேறுபாடு இல்லாத சம வாய்ப்புகள் கொண்ட ஒரு நியாயமான மற்றும் முன்னேற்றமிக்க சமத்துவ சமூக அமைப்பை நோக்கி பல்வேறு திட்டங்கள், பணிகள் கொள்கை முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு முன்னோடியாக சமூகத்தில், சமத்துவத்தை நிலை நிறுத்த, பல மாற்றங்களை முன்னெடுத்த சமூக சீர்திருத்தவாதி, தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில், தெருக்களில் இருந்து சாதிப் பெயர்கள் நீக்க 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இவ்வாணையில், பாகுபாட்டை தவிர்த்து, சமத்துவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம உள்ளாட்சிகள், உரிய தீர்மானங்களை நிறைவேற்றி சாதிப்பெயர்களை நீக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அரசு அனைத்து தரப்பு மக்களும் மதிப்போடும், சமமாகவும் நடத்தப்படும் போது மட்டுமே, உண்மையான சமத்துவமான சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என்ற அடிப்படையில் மேற்கொண்டு வரும் எண்ணற்ற முன்னோடி முயற்சிகளின் ஒரு பகுதியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி அன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் அனைத்து அரசு துறை அதிகாரிகளும், இதனை உடனடியாக செயல்பாட்டில் கொண்டு வர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை, ஒன்பதாம் தேதி அன்று, கோவை அவிநாசி சாலையில், முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் பெயர், ஜிடி நாயுடு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் ஜாதி பெயர் நீக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது






